உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் தாக்கப்பட்டு, தீவைக்கப்பட்டதில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணின் காதலரும், அவரை மணம் முடிப்பதாக கூறி உடல்ரீதியாக பயன்படுத்தியுள்ளார். ஆனால் திருமணம் செய்ய மறுத்ததுடன் அந்த பெண்ணை தனது நண்பனின் பாலியல் விருப்பத்திற்கும் உடன்பட கட்டாயப்படுத்தியுள்ளார். அவற்றை படம்பிடித்து வைத்து மிரட்டல் விடுத்த நிலையில் இருவர் மீதும் அந்த பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டு குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவர் கைதானார். மற்றொருவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து கடந்த மார்ச் மாதம்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ரேபரேலி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் பங்கேற்பதற்காக, நேற்று முன்தினம் காலை, இளம்பெண் தனது வீட்டில் இருந்து நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தபோது சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் அவரை வழிமறித்தனர். அப்பெண்ணை கடுமையாக தாக்கி அவர் மீது தீவைத்தனர். இதையடுத்து அந்த பெண் தீயுடன் சிறிது தூரம் ஓடி உள்ளார். இதைத்தொடர்ந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து போலீசார் வந்து அந்த பெண்ணை அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிறகு, லக்னோவில் உள்ள சியாம பிரசாத் முகர்ஜி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.இதையடுத்து கோட்டாட்சியர் தயாசங்கர் பதக்கிடம் வாக்குமூலம் அளித்தார். அதில், தான் நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் 5 பேர் தன்னை வழிமறித்து தாக்கி தீவைத்து எரிந்ததாக அவர் கூறினார்.
இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள், 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாக ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் அசுதோஷ் துபே கூறினார். இச்சம்பவத்தில் தொடர்புடைய இதே வழக்கில் ஜாமினில் வெளிவந்த குற்றவாளி உட்பட 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நேற்று மாலை அந்த பெண், மேல்சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டார். லக்னோவில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அவர் டெல்லி கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் டாக்டர்கள் குழுவும் சென்றது. அவருக்காக சிறப்பு ஐசியுவில் தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, அவரது உடல் நிலை கண்காணிக்கப்பட்ட வந்த நிலையில் நேற்று இரவு 11.45 மணி சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.